இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் வாகனம் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள பரமூர்-பதான்கோட் மாநில நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இரவு ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது. லஹார் அருகே ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் விழுந்ததில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.
தங்களது ஓராண்டு வயது குழந்தையை மருத்துவ சிகிச்சைக்காக பதான்கோட் அழைத்துச் சென்றபோது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் குழந்தை, அதன் தாத்தா, பாட்டி மற்றும் பெற்றோர் ஆகியோர் அடங்குவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்புப் படையினர் மீட்ட வருகின்றனர். மீட்புப் பணியின் போது இமயமலைப் பகுதியின் கடினமான நிலப்பரப்பு மற்றும் இரவு நேர இருட்டு பெரும் சவாலாக இருந்தது. விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.