பெங்களூருவில் கட்டுமானக் குறைபாடு காரணமாக ஒரு 18 மாடி கட்டிடத்தை முழுமையாக இடிக்க கட்டுமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் 49 வீடுகளை வாங்கிக் காத்திருந்த வாடிக்கையாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பெங்களூருவின் ஹார்லூர் சாலையில் அமைந்துள்ள 'SNN Raj Etternia' திட்டத்தின் 18 மாடி கோபுரம் (பிளாக் E-3) இடிக்கப்பட உள்ளது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுச் சான்றிதழ் (OC) பெற்ற சில மாதங்களிலேயே, நீர் அழுத்தப் பரிசோதனையின் போது கட்டிடம் ஒருபுறமாக சாய்வது கண்டறியப்பட்டது. மண்ணின் தரத்தை ஆய்வு செய்ததில் ஏற்பட்ட பிழையே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 49 பிரீமியம் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கட்டுமான நிறுவனம் சுமார் 20 கோடி ரூபாய் இழப்பைத் தாங்கிக்கொண்டு, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் பணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.