இந்தியாவிலிருந்து மின்சார வாகனங்களின் ஏற்றுமதி வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ஏற்றுமதி 14 மடங்கு உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார கார்களுக்கான தேவை இப்போது உள்நாட்டு சந்தையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இந்திய EV-க்கள் வேகமாக தடம் பதித்து வருகின்றன. 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து 15,641 மின்சார கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்த எண்ணிக்கை வெறும் 1,122 யூனிட்டுகளாக மட்டுமே இருந்தது. அதாவது ஒரே ஆண்டில் EV ஏற்றுமதி சுமார் 14 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சாதனையில் மாருதி சுஸுகியின் e-Vitara முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாடல் மட்டும் 47 நாடுகளுக்கு 15,210 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள மாருதி சுஸுகி ஆலையில் தயாரிக்கப்படும் இந்த கார், ஐரோப்பாவை உள்ளடக்கிய சர்வதேச சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. மாருதியின் இந்த வெற்றியைக் கண்டு, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களும் தங்கள் மின்சார கார்களை உலக சந்தைக்கு கொண்டு செல்லத் தயாராகி வருகின்றன.