E20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகவும், பாகங்கள் சேதமடைவதாகவும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு மெக்கானிக்கை வைத்து இது குறித்து அவர் விளக்கமளித்தார்.
டெல்லியில் நடைபெற்ற 'நேஷனல் டவுன் ஹால் அகென்ஸ்ட் E20' நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜரிவால் மத்திய அரசின் E20 எரிபொருள் கொள்கையை கடுமையாக விமர்சித்தார். இந்த எரிபொருள் வாகனங்களின் மைலேஜைக் குறைப்பதுடன், இன்ஜின் பாகங்களையும் சேதப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிகழ்வின் போது, அமீர் கான் என்ற அனுபவம் வாய்ந்த மோட்டார் மெக்கானிக்கை கெஜரிவால் மேடைக்கு அழைத்து விளக்கமளிக்கச் செய்தார். E20 பெட்ரோலில் கலக்கப்பட்டுள்ள எத்தனால், பழைய BS4 வாகனங்களின் கார்புரேட்டரிலும், புதிய BS6 வாகனங்களின் பியூயல் பம்ப் பில்டர்களிலும் அடைப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் விளக்கினார். இதனால் வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
E20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் எரிபொருள் திறன் 2% முதல் 6% வரை குறையக்கூடும் என்பதை அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது. குறிப்பாக 2005 முதல் 2016 வரை தயாரிக்கப்பட்ட BS-III வாகனங்களின் ரப்பர் குழாய்கள் மற்றும் சீல்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.