மாருதி சுஸுகி நிறுவனம் ஜூலை மாதத்தில் 2,48,845 வாகனங்களை உற்பத்தி செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 33% அதிகம்.

இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, ஜூலை மாதத்தில் 2,48,845 யூனிட்களை உற்பத்தி செய்து தனது வரலாற்றிலேயே அதிகபட்ச உற்பத்தி அளவை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1,87,073 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு உற்பத்தி 33% அதிகரித்துள்ளது.

கம்பாக்ட் மாடல்களான பலேனோ, செலிரியோ மற்றும் ஸ்விஃப்ட் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, பிரெஸா மற்றும் எர்டிகா போன்ற பயன்பாட்டு வாகனங்களின் உற்பத்தியும் 46% உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை 2,00,123 யூனிட்களை எட்டியுள்ளது.

சந்தை நிலவரத்தைப் பொறுத்தவரை, டீலர்க்களிடம் உள்ள கையிருப்பு தற்போது வெறும் 16 நாட்கள் மட்டுமே உள்ளது என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், சுமார் 1.6 லட்சம் யூனிட்களுக்கான முன்பதிவுகள் நிலுவையில் உள்ளன.