உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு வங்கியின் லாக்கரில் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வங்கி லாக்கர்களின் பாதுகாப்பு மற்றும் இழப்பீடு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வங்கி லாக்கரில் பல ஆண்டுகளாக வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதாகக் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் லாக்கர் பயன்பாட்டுப் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் வங்கி லாக்கர் வைத்திருப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் (RBI) விதிகளின்படி, லாக்கர் பயன்பாட்டைப் பற்றிய தகவல்களை வாடிக்கையாளருக்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும். ஆனால், லாக்கருக்குள் என்ன பொருட்கள் உள்ளன என்பதை வங்கி கண்காணிப்பதில்லை. எனவே, நகைகள் காணாமல் போனால் அதன் மதிப்பு மற்றும் உரிமையை நிரூபிப்பது வாடிக்கையாளரின் பொறுப்பாகும்.
வங்கியின் அலட்சியத்தால் இழப்பு ஏற்பட்டால் கூட, வங்கி வழங்கும் இழப்பீடு என்பது லாக்கர் வாடகைக்கு 100 மடங்கு மட்டுமே. அதாவது, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனாலும், ஆண்டு வாடகையை வைத்து மிகக் குறைந்த தொகையே இழப்பீடாகக் கிடைக்கும். வங்கி லாக்கரை ஒரு காப்பீடாகக் கருதக்கூடாது என்பதே உண்மை.