கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்கள் AI தரவு மையங்களை இயக்க இயற்கை எரிவாயுவை நம்பியிருக்கின்றன. ஆனால், எரிவாயு விலை மூன்று மடங்கு உயரக்கூடும் என்ற கணிப்பு அவற்றின் செலவை பெருமளவு அதிகரிக்கக்கூடும்.

ஆண்டு கணக்காக காற்று மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்திய அமேசான், கூகுள், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள், இப்போது தங்களின் AI லட்சியங்களை நிறைவேற்ற இயற்கை எரிவாயுவை நம்பியிருக்கின்றன. இருப்பினும், எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனமான 'நோரேவா' (Noreva) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, இந்த முடிவு அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறது.

அமெரிக்காவின் சில பகுதிகளில் இயற்கை எரிவாயு விலை வரும் ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று நோரேவா கூறுகிறது. ஹைப்பர்ஸ்கேலர்களின் தேவை அதிகரிப்பதும், எரிவாயு விநியோகம் குறைவதும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி அதிகரிப்பதும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும். தற்போது மில்லியன் BTU-க்கு சுமார் $2 முதல் $4.50 வரை இருக்கும் விலை, $10-க்கும் அதிகமாக உயர வாய்ப்புள்ளது.

மெட்டா, மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஏற்கனவே டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் மிகப்பெரிய எரிவாயு மின் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளன. எரிபொருள் செலவு என்பது மின்சாரச் செலவில் பாதியாகும் என்பதால், எரிவாயு விலை உயர்வு AI தரவு மையங்களின் இயக்கச் செலவை மிக அதிகமாக உயர்த்தும். இது இறுதியில் AI சேவைகளின் விலையையும் அதிகரிக்கக்கூடும்.