இந்தியாவின் நிலக்கரி தேவை 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 1.6 பில்லியன் டன்களாக உயரும் என்று மத்திய நிலக்கரி செயலாளர் விக்கிராம் தேவ் தத் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு வெளிப்படையான சந்தை அடிப்படையிலான விலை நிர்ணய முறை தேவைப்படுகிறது.

மும்பையில் நடைபெற்ற உலகளாவிய கமாடிட்டிஸ் மாநாட்டில் பேசிய மத்திய நிலக்கரி செயலாளர் விக்கிராம் தேவ் தத், இந்தியா நிலக்கரி தட்டுப்பாட்டிலிருந்து உபரி நிலையை நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறினார். கடந்த இரண்டு நிதியாண்டுகளில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் மெட்ரிக் டன்னைக் கடந்துள்ள போதிலும், ஆற்றல் தேவைகளுக்காக தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையை மாற்ற, ஒரு சுதந்திரமான சந்தையாக செயல்படும் 'நிலக்கரி பரிமாற்ற மையத்தை' (Coal Exchange) அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இது நிலக்கரி வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையையும், போட்டித்தன்மை வாய்ந்த விலை நிர்ணயத்தையும் உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

அடுத்த சில மாதங்களில் இந்த நிலக்கரி பரிமாற்ற மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இது வணிகம் செய்வதை எளிதாக்குவதுடன், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும், தொழில் வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.