டெல்லி மாஸ்டர் பிளான் 2047-ன் படி, 2047க்குள் நகரில் கூடுதலாக 40 லட்சம் வீடுகள் தேவைப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான விடுதிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான வாடகை வீடுகளுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

டெல்லி மாஸ்டர் பிளான் 2047, மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் நகர விரிவாக்கத்தினால் 2047-க்குள் தலைநகரில் சுமார் 40 லட்சம் கூடுதல் வீடுகள் தேவைப்படும் என்று கணித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் மலிவு விலை வீடுகளை உருவாக்குவதாகும், இதில் 25 முதல் 60 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சிறிய வீடுகள் கட்ட தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

மாணவர்கள் மற்றும் இளம் தொழிலாளர்களுக்கான விடுதிகள், குறைந்த வாடகை கொண்ட தங்குமிடங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான பிரத்யேக குடியிருப்புகளை உருவாக்கத் தனியார் டெவலப்பர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் இந்தத் திட்டம் கூறுகிறது. மெட்ரோ நிலையங்கள் மற்றும் பொது போக்குவரத்து மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில ஒருங்கிணைப்பு (Land pooling) மற்றும் டிரான்சிட்-ஓரியண்டட் டெவலப்மென்ட் (TOD) மூலம் 30 லட்சம் வீடுகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களைத் தடுக்கவும் இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது. முறையற்ற குடியிருப்புகளில் சாலை வசதி, திறந்தவெளி மற்றும் அவசர கால வாகனங்களின் அணுகலை மேம்படுத்த மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், குடிசைப் பகுதி மக்களின் மறுவாழ்வு மற்றும் நகர்ப்புற கிராமங்களின் பாதுகாப்பிற்கும் இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.