கூரியர் சேவைகளின் மறைவில் இயங்கி வந்த ஒரு பெரிய அளவிலான LSD விநியோக வலையமைப்பை நரகோடிக்ஸ் கட்டுப்பாட்டு பீரோ (NCB) முறியடித்துள்ளது. இந்த நடவடிக்கையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, ஹைதராபாத், மும்பை மற்றும் கொச்சி மண்டலப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம், கூரியர் சேவைகளைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் LSD விநியோகம் செய்த ஒரு சதித் திட்டத்தை NCB முறியடித்தது. புனேவிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கூரியர் மூலம் இந்த போதைப்பொருள் அனுப்பப்பட்டதை புலனாய்வு உறுதி செய்தது.

இந்தத் தொடர் நடவடிக்கையில் 2,796 LSD பிளாட்கள், ஹைட்ரோபோனிக் கஞ்சா மற்றும் பிற போதைப்பொருள் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஒரு மருத்துவர் மற்றும் மருத்துவ மாணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் விற்பனைக்காக டார்க்நெட் மற்றும் கிரிப்டோகரன்சி முறையைப் பயன்படுத்தி வந்ததை புலனாய்வுத் துறை கண்டறிந்துள்ளது.