பெங்களூரு வைட்ஃபீல்டில் நடந்த விபத்தில் பைக் டாக்ஸியில் சென்ற 26 வயது ஐடி ஊழியர் அமர்தியா குமார் உயிருக்கு போராடி வருகிறார். ஒரு கார் மோதிவிட்டு தப்பியோடியதால் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பெங்களூரு வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ஐடிபிஎல் மெயின் ரோட்டில் கடந்த ஜூலை 13 இரவு நடந்த விபத்தில் 26 வயது ஐடி பணியாளர் அமர்தியா குமார் பலத்த காயமடைந்துள்ளார். இரவு 11:45 மணியளவில் ஃபார்முலா ஒன் சந்திப்பிற்கு அருகில் ஒரு கார் பைக் டாக்ஸியை பின்னால் இருந்து மோதியது. இந்த விபத்தில் அமர்தியா தலையில் பலத்த காயமடைந்து தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமர்தியா சேகஹல்லியில் இருந்து ஹூடி செல்ல பைக் டாக்ஸி முன்பதிவு செய்திருந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பைக் ஓட்டுநருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன, ஆனால் அமர்தியாவுக்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
விபத்து குறித்து அமர்தியாவின் சகோதரி சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பைக் டாக்ஸி நிறுவனத்தின் அலட்சியத்தை கண்டித்துள்ளார். மேலும், பைக் ஓட்டுநருக்கு முறையான உரிமம் இருந்ததா என்பதையும் விசாரிக்குமாறு கோரியுள்ளார். வைட்ஃபீல்ட் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துவிட்டு, தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.