அசாம் மாநிலம் ஹைலகண்டி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஐந்து சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கில் இந்த கொடூரச் செயலைச் செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அசாமின் ஹைலகண்டி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை அவரது வீட்டிற்குள்ளேயே தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஐந்து சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1 அன்று சிறுமியின் தாயும் தம்பியும் வீட்டிற்கு திரும்பியபோது, சிறுமியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஒரு செங்கல் கொண்டு சிறுமி கொல்லப்பட்டதாகவும், சமையலறைப் பாத்திரங்கள் மூலம் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமி கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான 18 வயது இளைஞருடன் உறவில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. சிறுமி மற்றுமொரு இளைஞருடன் தொடர்பில் இருந்ததால், அவருக்கு 'பாடம் புகட்ட வேண்டும்' என்ற நோக்கத்துடன் இந்தத் திட்டத்தை இச்சிறுவர்கள் இணைந்து செய்ததாகக் கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இ-ரிக்ஷா மற்றும் ஆட்டோ-ரிக்ஷா ஓட்டுநர்களாகப் பணியாற்றுபவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் போக்சோ (POCSO) சட்டம் மற்றும் கொலைக் குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மற்றும் தடய அறிவியல் குழுவினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் போராட்டங்களையும் கிளப்பியுள்ளது.