புனே காவல்துறையினர் கொலைக் குற்றச்சாட்டுகளில் சிக்கிய சிறுவர்களைக் காவல்துறையினரின் வாகனத்தின் முன்பகுதியில் கட்டி பொதுவெளியில் அணிவகுத்துச் சென்ற சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது.

புனே காவல்துறையினர், கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று சிறுவர்களைக் காவல்துறையினரின் வாகனத்தின் முன்பகுதியில் (bonnet) கட்டி, நகரின் தெருக்களில் அணிவகுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகாராஷ்டிரா மாநில மனித உரிமைகள் ஆணையம் (MSHRC), இந்தச் சம்பவத்தை 'காட்டுத்தனமான செயல்' என்று சாடியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக புனே காவல் ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோரிடமிருந்து தனிப்பட்ட வாக்குமூலங்களையும் கேட்டுள்ளது. இச்சம்பவம் சிறுவர் நீதிச் சட்டத்தை மீறுவதாகவும், சிறுவர்களுக்கு மிகுந்த மன உளச்சத்தை ஏற்படுத்தியதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த உண்மையை அறிய ஆணையத்தின் சொந்த புலனாய்வுப் பிரிவுக்கு ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை மீறும் செயல் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.