டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக 19 வயது இளைஞர் மற்றும் 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். என்கிரிப்ட் செய்யப்பட்ட செயலிகள் மூலம் இவர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டொராண்டோ போலீசார் கடந்த மாதம் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக இரண்டு பேரைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். சந்தேக நபர்களை 'கூலி குற்றவாளிகள்' என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு 19 வயது இளைஞரும், மற்றொருவர் 15 வயது சிறுவனும் ஆவர்.

சந்தேக நபர்கள் ஒரு என்கிரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் ஆப் மூலம் பணியமர்த்தப்பட்டதாகவும், தூதரகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அவர்களுக்குப் பணம் ஆசை காட்டப்பட்டதாகவும் போலீசார் நம்புகின்றனர். இந்த குற்றங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டறிவதே தற்போதைய விசாரணையின் முக்கிய நோக்கம் என்று போலீஸ் தலைவர் மைரான் டெம்கிவ் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் செயலிகள் மூலம் கொலை, துப்பாக்கிச் சூடு மற்றும் தீவைக்கும் போன்ற குற்றங்களைச் செய்ய நபர்களைத் தேடும் போக்கு அதிகரித்து வருவதாகத் துப்பறியும் அதிகாரி ஜோ மேத்யூஸ் எச்சரித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்திலும் இதே தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.