டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் 1.06 கோடி ரூபாயை மோசடி செய்த கும்பலுக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று 63 வயது மூதாட்டி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் எனப் போலி வேடமிட்டு இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அரசு ஊழியரான 63 வயது மூதாட்டி ஒருவர், தனது டிஜிட்டல் அரெஸ்ட் புகார் தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வுத் துறைக்கு (CBI) மாற்றக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் போல நடித்து, நவம்பர் 2025 முதல் அவரைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தி இந்த மோசடி செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது ஆதார் எண் பயங்கரவாத நிதி உதவியுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என்றும் மோசடி கும்பல் கூறிள்ளது. வீடியோ மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் அவரைத் தொடர்ந்து 'டிஜிட்டல் கண்காணிப்பில்' வைத்திருந்தனர். பயமுறுத்தப்பட்ட நிலையில், அவர் 1.06 கோடி ரூபாயை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.
டெல்லி காவல்துறையினர் சில தொகையை முடக்கியிருந்தாலும், பாதிக்கப்பட்டவருக்கு மிகக் குறைந்த தொகையே திரும்பக் கிடைத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். விசாரணையில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் பண மீட்பு குறைவான காரணங்களால் சிபிஐ விசாரணை கோரப்பட்டுள்ளது.