ஒடிசாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தினால் 30 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் சுமார் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாநதி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மிதமான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் மேல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, ஒடிசாவின் 20 மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் கனமழை ஏற்பட்டு 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்தில் வழக்கத்தை விட 96.7% கூடுதல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது இது முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
பாத்ரக் மாவட்டம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அரசு 234 நிவாரண முகாம்களைத் திறந்துள்ளது. பாலேஸ்வர மற்றும் ஜஜ்பூர் மாவட்டங்களும் அதிக பாதிப்படைந்துள்ளது. மீட்புப் பணிகளுக்காக 136 மீட்புக் குழுக்கள் மாநிலம் முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளன.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் புஜாரி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், மகாநதி ஆற்றின் மேல் பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் மிதமான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.