புதிய பாடப்புத்தகங்கள் கிடைக்காததாலும், பயன்பாட்டு அடிப்படையிலான தேர்வு முறையாலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது. ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் கட்டணச் சலுகை குறித்த பரிந்துரைகளையும் குழு விடுத்துள்ளது.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் அதன் செயல்பாட்டிற்கு இடையே உள்ள குறிப்பிடத்தக்க இடைவெளியை ஒரு நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. புதிய பாடப்புத்தகங்கள் இன்னும் பயன்பாட்டிற்கு வராததாலும், புதிய பயன்பாட்டு அடிப்படையிலான தேர்வு முறையாலும் மாணவர்கள், குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மிகுந்த குழப்பத்திற்கும் கல்வி அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

NCERT மீதமுள்ள புதிய பாடப்புத்தகங்களை விரைவாகத் தயாரித்து, அச்சிட்டு, நாடு முழுவதும் விநியோகம் செய்ய வேண்டும் என்று குழு கல்வி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. மேலும், ஆசிரியர்கள் புதிய கற்பித்தல் முறைகளைக் கையாளும் வகையில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.

தனியார் பள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி கட்டணம் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கான தேர்வுக்கட்டணச் சலுகைகள் குறித்தும் குழு கவலை தெரிவித்துள்ளது. மேலும், CBSE தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்வதில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் குழு கேட்டுக்கொண்டுள்ளது.