கேரளாவின் திருச்சூரில் உள்ள ஒரு பள்ளியின் உரிமையாளர், சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளாத மாணவர்களை 'பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்' என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களை 'தேச விரோதிகள்' என்று முத்திரை குத்துவதை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

திருச்சூர் மலா பகுதியில் உள்ள டாக்டர் ராஜு டேவிஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் உரிமையாளர் ராஜு டேவிஸ், சுதந்திர தின விழாவில் பங்கேற்காத மாணவர்களைக் குறித்துக் கூறிய கருத்துக்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. வாட்ஸ்அப் குழுவில் அவர் அனுப்பிய ஒரு குரல் பதிவில், விழாவில் கலந்து கொள்ளாத மாணவர்கள் 'பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்' என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

மாணவர்கள் ஏன் வரவில்லை என்பதற்கான காரணங்களைக் கேட்காமல், அவர்களைத் தேச விரதிகள் என்று சித்தரிப்பதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல்வேறு காரணங்களால் விழாவில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களைத் தரம் தாழ்ந்த முறையில் விமர்சிப்பதாகப் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாகத் தனது கருத்தை நியாயப்படுத்திய டேவிஸ், பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடு என்றும், சுதந்திர தினத்தன்று வீட்டில் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறினார். இந்தச் செயலைத் தொடர்ந்து, எஸ்எஃப்ஐ (SFI) மலாப் பகுதி குழுவினர் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்ட ஊர்வலம் நடத்தினர்.