கன்னட நடிகர் தர்ஷன் முக்கிய குற்றவாளியாக உள்ள ரேணுகாசுவாமி கொலை வழக்கில் புதிய திருப்பமாக, குற்றவாளி பிரதோஷ் அப்ரூவராக மாற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தர்ஷனுக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கன்னட நடிகர் தர்ஷன் முக்கிய குற்றவாளியாக இருக்கும் ரேணுகாசுவாமி கொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரதோஷ், அப்ரூவராக மாற ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கொலைக்கு முன்னும் பின்னும் நடந்த சம்பவங்கள் குறித்து அவர் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பிரதோஷின் மனுவின்படி, பவித்ரா கௌடாவுக்கு ரேணுகாசுவாமி அனுப்பிய குறுஞ்செய்திகள் குறித்து தர்ஷன் அவரிடம் விசாரித்து கடுமையாக தாக்கியுள்ளார். தாக்குதலின் போது ரேணுகாசுவாமியின் நெஞ்சில் தர்ஷன் காலால் மிதித்ததாகவும், பவித்ரா கௌடாவையும் அவரை அடிக்குமாறு தர்ஷன் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கொலைக்குப் பிறகு உடலை மறைக்கவும், குற்றத்தை திசைதிருப்பவும் திட்டமிட்டதாக பிரதோஷ் தெரிவித்துள்ளார்.
பிரதோஷைத் தொடர்ந்து மேலும் இரு குற்றவாளிகளும் அப்ரூவராக மாற மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையில், பிரதோஷ் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த அப்ரூவர் மனுவுக்கு அரசுத் தரப்பு நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பெங்களூரு 59வது செஷன்ஸ் நீதிமன்றம் இதன் மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.