பெங்களூருவில் பருவமழையால் சாலைகள் மோசமடைந்துள்ள நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், சாலையில் இருந்த ஆபத்தான குழியை தானே மணல் கொட்டி மூடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூருவில் பருவமழை காலங்களில் சாலைகளில் ஏற்படும் குண்டும்குழிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் பெரும் தலைவலியாக மாறி வருகின்றன. இந்நிலையில், மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் அதிருப்தியடைந்த பெண் ஒருவர், சாலையில் உள்ள ஆபத்தான குழியை தானே சீரமைக்க முடிவு செய்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது.

வைரல் வீடியோவில், அந்தப் பெண் கட்டுமானப் பொருட்கள் அடங்கிய இரண்டு மூட்டைகளுடன் சாலையோரம் நிற்பதைக் காண முடிகிறது. வாகனங்கள் கடந்து செல்லும் பாதையில் உள்ள ஆழமான குழியில் ஜல்லிக் கற்களையும் மண்ணையும் கொட்டி, அவர் சாலையை சமன்படுத்த முயற்சிக்கிறார். இந்த காட்சி பெங்களூரு மக்களின் அன்றாட அவல நிலையை பிரதிபலிப்பதாக சமூக வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மழைக் காலங்களில் சாலைகளில் தேங்கும் நீரால் குழிகள் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. அந்தப் பெண்ணின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், அடிப்படை சாலை வசதிகளைக் கூட செய்து தராத நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.