உக்ரைனின் தாக்குதலால் ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ளதால், அங்கு கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை சமாளிக்க ரஷ்யா இப்போது இந்தியாவிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்கிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யா தற்போது ஒரு மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. உக்ரைனின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் ரஷ்யாவின் சுத்திகரிப்புத் திறனில் 40% இழப்பை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்யாவின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் குறிவைத்துள்ளதால், புதின் நிர்வாகம் இக்கட்டான சூழலில் உள்ளது.
முன்பு ரஷ்யா இந்தியாவிலிருந்து கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்தியா அந்த கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து பெட்ரோல் மற்றும் டீசலாக ரஷ்யாவிற்குத் திருப்பி ஏற்றுமதி செய்து வருகிறது. சமீபத்தில் குஜராத்தின் நயாரா எனர்ஜி சுத்திகரிப்பகத்திலிருந்து 60,000 மெட்ரிக் டன் பெட்ரோல் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகர்கள் மூலம் இந்த ஏற்றுமதி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, ரஷ்யாவின் 55 மாகாணங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ரேஷன் முறையில் விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து எரிபொருள் ஏற்றுமதியை புதின் அரசு தடை செய்துள்ளதோடு, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய குறைந்த தரமான எரிபொருளை உற்பத்தி செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.