ஈரானுடன் போரின் விளைவாக அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் ஆயுத இருப்பு ஆபத்தான அளவில் குறைந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் அமெரிக்க அரசு இதை மறுத்துள்ளது.

ஈரானுடனான ஐந்து மாதப் போருக்குப் பிறகு, அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு ஆயுதங்களின் இருப்பு ஆபத்தான முறையில் குறைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பேட்ரியாட் (Patriot) மற்றும் தாட் (THAAD) வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகளின் தட்டுப்பாடு அமெரிக்கப் படிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பென்டகன் இந்தத் தகவல்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளன. அமெரிக்காவிடம் உலகில் உள்ள மற்ற நாடுகளை விட அதிக அளவிலான வெடிபொருட்கள் இருப்பதாகவும், தற்போதைய நிலை மிகவும் வலுவாக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னல், அமெரிக்க ராணுவம் உலகின் வலிமையானது என்றும், எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளத் தேவையான அனைத்தும் எங்களிடம் உள்ளன என்றும் கூறினார்.

ஆனால், சிஎஸ்ஐஎஸ் (CSIS) போன்ற ஆய்வு நிறுவனங்கள், போருக்கு முந்தைய நிலையை அடைய குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும் என்று கணித்துள்ளன. சிஎன்என் அறிக்கையின்படி, அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதால், இது பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.