தலிபான் ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில், நிதிப் பற்றாக்குறையால் ஆப்கானிஸ்தானில் இயங்கும் பெண்களுக்கான அமைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை அடுத்த ஆண்டு மூடப்படலாம் என்று ஐநா எச்சரித்துள்ளது.

தலிபான் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நிதி நெருக்கடியால் ஆப்கானிஸ்தானில் செயல்படும் பெண்களுக்கான அமைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை அடுத்த ஒரு ஆண்டிற்குள் செயல்பட முடியாமல் போகலாம் என்று ஐநா எச்சரித்துள்ளது. பெண் உரிமைகளுக்கான நிதியைத் குறைக்க வேண்டாம் என்று ஐநா பெண்கள் (UN Women) சிறப்புப் பிரதிநிதி சூசன் பெர்குசன் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் 74 பெண் அமைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை நிதிப் பிரச்சனைகளால் மூடப்படும் நிலையில் உள்ளன என்று அவர் கூறினார். ஆப்கானிஸ்தானுக்கான ஐநாவின் 1.7 பில்லியன் டாலர் மனிதாபிமானத் தேவைக்கு வெறும் 25 சதவீத நிதி மட்டுமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலிபான் ஆட்சியில் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நடமாடும் சுதந்திரம் ஆகியவற்றின் மீது 100-க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பெண்களின் மனநலம் மற்றும் சமூக வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.