ஈரான் உடனான மோதலில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மிகவும் சுமூகமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் உடனான மோதலில் மூன்று நாட்களாகத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், மிகவும் சுமூகமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு இருப்பதாக அவர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது நம்பிக்கை தெரிவித்தார்.
இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் வாஷிங்டன் மீண்டும் தனது பழைய தாக்குதல் முறைகளுக்குத் திரும்பும் என்று அவர் எச்சரித்தார். ஆனால், ஈரான் எந்தவொரு நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறுவதாக மறுத்துள்ளது. மத்தியஸ்த நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்கவே அமெரிக்கத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியதாக ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்காவின் ஆயுத இருப்பு குறைந்துவிட்டதாகக் கூறப்படும் செய்திகளை ட்ரம்ப் நிராகரித்தார். அமெரிக்காவிடம் போதுமான அளவிலான வெடிமருந்துகள் மற்றும் பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள் இருப்பதாகவும், மேலும் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் உறுதிபடக் கூறினார். போர் பதற்றம் குறையும் என்ற எதிர்பார்ப்பால் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.