ஐரோப்பா முழுவதும் நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் வெப்ப அலை காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியின் உச்சகட்டமாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது. டானியூப் நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவிற்கு குறைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக, ஹங்கேரியின் ஒரே அணுமின் நிலையத்தை தற்காலிகமாக மூட அந்நாட்டு பிரதமர் பீட்டர் மகியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 44 ஆண்டுகளில் இந்த அணுமின் நிலையம் முழுமையாக மூடப்படுவது இதுவே முதல் முறையாகும். அணுமின் நிலையத்தை குளிர்விக்க பயன்படும் டானியூப் நதியின் நீர்மட்டம் மிக மோசமாகக் குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.
இது குறித்து பிரதமர் பீட்டர் மகியர் தனது எக்ஸ் தளத்தில், டானியூப் நதியின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், பாக்ஸ் (Paks) அணுமின் நிலையத்தின் மின் உற்பத்தி வெறும் 240 மெகாவாட்டாகக் குறையும் என்றும், பின்னர் அது முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அணுமின் நிலையம் பொதுவாக ஹங்கேரியின் மின்சாரத் தேவையில் மூன்றில் ஒரு பங்கை பூர்த்தி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்றும், அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிர காலநிலை மாற்றம் ஐரோப்பாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.