அமெரிக்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியல் மற்றும் தபால் வாக்கு முறையை மாற்ற முயன்ற டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாக உத்தரவை இந்திய வம்சாவளி நீதிபதி இந்திரா தல்வானி தடுத்துள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் திட்டங்களுக்கு நீதிமன்றம் பெரும் பின்னடைவை அளித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூட்டாட்சி நீதிபதி இந்திரா தல்வானி, ட்ரம்ப் நிர்வாகத்தின் நிர்வாக உத்தரவின் முக்கியப் பகுதிகளைத் தடுத்துள்ளார். தகுதியான வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் தபால் மூலம் வாக்குச் சீட்டுகளை அனுப்புவதில் புதிய விதிகளை அமல்படுத்த இந்த உத்தரவு முயன்றது.

தேர்தலை முறைப்படுத்துவதற்கான அதிகாரம் அதிபருக்கு இல்லை என்றும், அரசியலமைப்பின் படி அது மாநிலங்கள் மற்றும் காங்கிரஸிடம் உள்ளது என்றும் நீதிபதி தல்வானி தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையைத் தேர்தல் பாதுகாப்பிற்கு அவசியம் என்று கூறினாலும், நீதிமன்றம் இதனை அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவித்துள்ளது.