பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இறந்துவிட்டதாக பரவிய வதந்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை முதலில் வெளியிட்ட பாகிஸ்தான் பத்திரிகையாளர் பின்னர் அதை வாபஸ் பெற்றார். இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பிடிஐ கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பிரபல பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி, இம்ரான் கான் உயிருடன் இல்லை என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு அந்த பத்திரிகையாளர் தனது கூற்றை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் ஒரு அரிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இம்ரான் கான் இறக்கவில்லை என்றும், அவர் நலமுடன் சிறையில் இருக்கிறார் என்றும் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இம்ரான் கானுக்கு ஏதேனும் நேர்ந்தால் 20 லட்சம் ஆதரவாளர்கள் வீதியில் இறங்க தயாராக இருப்பதாக அவரது பிடிஐ கட்சி எச்சரித்துள்ளது.

மற்றொரு புறம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபியின் மோசமான சிறை நிலைமைகள் குறித்து பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.