சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பூஞ்ச் மற்றும் டோடா மாவட்டங்களில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பூஞ்சின் மெந்தார் பகுதியில் ஒரு சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நகர்வு கண்டறியப்பட்டதை அடுத்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, காடுகள் மற்றும் மலைப்பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.
மேலும், டோடா மாவட்டத்தின் பதேர்வா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உள்ளூர் மக்கள் தகவல் அளித்ததை அடுத்து தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. ஸ்ரீநகரின் லால் சாக் உள்ளிட்ட முக்கிய சந்தைகள் மற்றும் ஹோட்டல்களில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். காஷ்மீர் பண்டிதர்களுக்கு எதிராகப் பெறப்பட்ட ஆன்லைன் மிரட்டல்களையும் முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.