மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டல குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கான தென்மண்டல குழு உறுப்பினர்களாக அமைச்சர்கள் ஆர். நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோரை தமிழக அரசு நியமித்துள்ளது.

சென்னைக்கு தெற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் 31-வது தென்மண்டல குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன் கீழ் அமைக்கப்பட்ட தென்மண்டல குழுவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த 31-வது கூட்டம் முன்னதாக 2025 ஜனவரியில் நடைபெறவிருந்து ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2022 செப்டம்பரில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்காக, தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தவிர, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் தென்மண்டல குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தலைமைச் செயலாளர் எம். சாய்குமாருடன் இணைந்து கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) கே. மணிவாசன் இரண்டாவது ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.