கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கண்ணூர் மாவட்டம் அய்யன்குன்னில் 223 மிமீ மழை பதிவாகியுள்ளது. கனமழையினால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பருவமழை மிகத் தீவிரமாகத் தொடர்கிறது. கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 1 மதியம் 12 மணி நிலவரப்படி, கண்ணூரின் அய்யன்குன்னில் அதிகபட்சமாக 223.0 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கோழிக்கோட்டின் உரும்மியில் 123.5 மிமீ மற்றும் கண்ணூர் செம்பேரியில் 110.5 மிமீ மழை பதிவானதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையினால் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கண்ணூர், வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.