தேசியப் பாடலைப் போற்றுவதற்காகக் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்திருத்தம், அதன் நோக்கத்திற்கு மாறாக எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசு நிகழ்வுகளின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதத்துடன் சேர்த்து வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை சசி தரூர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
சமூக வலைத்தளம் எக்ஸ்-இல் பதிவிட்டுள்ள அவர், தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் ஆகியவற்றை முழுமையாகப் பாட எடுக்கும் நேரத்தைக் குறிப்பிட்டார். சட்டத்தின் மூலம் மரியாதை மற்றும் பொறுமையைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும், இது மக்களின் இயல்பிற்கு மாறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.