புனே லோஹாகாட் கோட்டையிலிருந்து தனது வருங்கால கணவர் கேதன் அகர்வாலை தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கில் சியா கோயல் மற்றும் அவரது காதலன் சேத்தன் சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத்தைத் தள்ளிப்போட முதலில் அவரை காயப்படுத்த திட்டமிட்ட இவர்கள், பின்னர் அது ஆபத்தானது என உணர்ந்து கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோஹாகாட் கோட்டையிலிருந்து தனது வருங்கால கணவர் கேதன் அகர்வாலை (26) கீழே தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் சியா கோயல் (20) மற்றும் அவரது காதலன் சேத்தன் சவுத்ரி (22) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது திருமணம் வரும் நவம்பர் மாதம் ஜெய்ப்பூரில் பிரமாண்டமாக நடக்கவிருந்தது. இந்த திருமணத்தை நிறுத்த விரும்பிய சியா, முதலில் கேதனை ஒரு விபத்து மூலம் காயப்படுத்த திட்டமிட்டார். ஆனால், அவர் உயிர் பிழைத்து தங்களின் சதியை கண்டுபிடித்துவிடுவார் என்ற பயத்தில், அவரை முழுமையாக கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்த கொலையை விபத்து போல காட்டுவதற்காக, இருவரும் இணையத்தில் பல்வேறு வழிகளைத் தேடியதுடன், பல சஸ்பென்ஸ் படங்களையும் பார்த்துள்ளனர். மேலும், கொலை செய்ய பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய லோனாவாலாவின் டைகர் பாயிண்ட், விசாபூர் கோட்டை போன்ற உயரமான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, இறுதியாக லோஹாகாட் கோட்டையை தேர்வு செய்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.