கேரளாவில் காலாவதியான அழகு சாதனப் பொருளை விற்ற கடைக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.15,000 அபராதம் விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்மணி தாக்கல் செய்த வழக்கில், காலாவதியான பொருளை விற்றதோடு அவமரியாதையாக நடத்திய கடைக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கேரள நுகர்வோர் நீதிமன்றம் ஒன்று, காலாவதியான 'யார்ட்லி லண்டன்' அழகு சாதனப் பொருளை விற்றதற்காக ஒரு கடைக்கு சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறைக்காக அபராதம் விதித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான மற்றும் காலாவதி தேதிக்குள் இருக்கும் பொருட்களைப் பெற முழு உரிமை உண்டு என்று குறிப்பிட்ட நீதிமன்றம், பொருளின் விலையான ரூ.175-ஐத் திருப்பித் தருவதோடு, ரூ.15,000 இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கடந்த மார்ச் 19, 2023 அன்று ரூ.175 கொடுத்து இந்த தயாரிப்பை வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அது டிசம்பர் 12, 2022 அன்றே காலாவதியாகிவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கடையில் முறையிட்டபோது, அங்கிருந்த ஊழியர்கள் அவமரியாதையாகப் பேசியதோடு, "முடிந்தால் வழக்குத் தொடருங்கள்" என்று திமிராகப் பதிலளித்துள்ளனர். மேலும், அவர்கள் வழங்கிய பில்லின் எழுத்துக்களும் விரைவாக அழிந்துபோகும் தரத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், காலாவதியான பொருட்களை விற்பது நுகர்வோர் உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்று கூறியது. மேலும், எதிர்காலத்தில் ஆதாரமாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தெளிவான மற்றும் நீடித்த பில்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு வணிகங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.