டெல்லியில் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட மானிய விலையிலான அரிசி, தனியார் நிறுவனத்திற்கு இரட்டிப்பு விலைக்கு விற்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் சௌரப் பரத்வாஜ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், வாரத்திற்கு 31,000 மெட்ரிக் டன் அரிசியை அசாம் based நிறுவனம் ஒன்றுக்கு மானிய விலையில் வழங்க FCI ஒப்புக்கொண்டதாகக் கூறினார். ஆனால், அந்த அரிசி ஏழைகளுக்கு விநியோகிக்கப்படாமல், ஹரியானாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு இரட்டிப்பு விலைக்கு விற்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

கிலோ ஒன்றுக்கு 23 ரூபாய்க்கு வாங்கப்பட்ட அரிசி, சந்தையில் 46 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும், இதன் மூலம் பெரும் கமிஷன் ஈட்டப்பட்டதாகவும் பரத்வாஜ் கூறினார். இந்த விவகாரத்தில் ஒரு அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் உண்மையான குற்றவாளிகள் காப்பாற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா, இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரித்துள்ளார்.