கான்பூரில் உள்ள SBI லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் காணாமல் போயுள்ளன. 23 ஆண்டுகளுக்குப் பிறகு லாக்கரைத் திறந்த பெண், நகைகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து புகார் அளித்துள்ளார்.
கான்பூரின் ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள SBI கிளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 2003-ஆம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் டிராவன்கோர் கிளையில் லாக்கர் எடுத்த பெண், அதில் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை வைத்திருந்தார். கணவரின் மறைவுக்குப் பிறகு லக்னோவிற்குச் சென்ற அவர், நீண்ட நாட்களாக வங்கிக்குச் செல்லவில்லை. இருப்பினும், அவரது கணக்கிலிருந்து லாக்கர் கட்டணம் தொடர்ந்து கழிக்கப்பட்டதால், நகைகள் பாதுகாப்பாக இருப்பதாக அவர் நம்பினார்.
சமீபத்தில் லாக்கரைத் திறந்தபோது அது காலியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. லாக்கரை ஏற்கனவே யாரோ அணுகியதற்கான பதிவுகள் கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது சிசிடிவி மற்றும் பதிவேடுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.