மெட்ரோ நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் அடிப்படை அறை கட்டணங்கள், அருகில் உள்ள 3-ஸ்டார் ஹோட்டல்களின் சராசரி கட்டணத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் நிதிச்சுமையைக் குறைக்க, அடிப்படை அறை கட்டணங்களை அருகில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்களின் விலைக்கு இணையாகக் குறைக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் மருத்துவமனை கட்டணங்களை முறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வரும் நிலையில் இந்த பரிந்துரை வெளியாகியுள்ளது.

மேலும், சிகிச்சைக்கு முன்னதாகவே தோராயமான செலவு விவரங்களை நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், காப்பீடு வைத்திருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே கட்டண வேறுபாடு இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், மருத்துவமனைகள் வழங்கும் சிறப்பு வசதிகளுக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவமனை சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.