பெல்ஜியத்தின் மிகப்பெரிய காட்டுத்தீ ஜெர்மன் எல்லை நோக்கி பரவி வருவதால் 600 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பெல்ஜியத்தின் ஹை ஃபன்ஸ்ஸ் இயற்கை காப்பகத்தில் பெல்ஜிய வரலாற்றிலேயே மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை லியேஜ் மாகாணத்தில் தொடங்கிய இந்தத் தீ, தற்போது ஜெர்மன் எல்லையை நோக்கி வேகமாகப் பரவி வருகிறது. இது இதுவரை 27 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைச் சுட்டெரித்துள்ளது.

இந்தத் தீயைக் கட்டுப்படுத்த பெல்ஜியம், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து 250-க்கும் மேற்பட்ட அவசரக்காலப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காற்றின் திசை மாறியதால், வாய்ம்ஸ் மற்றும் பட்ஜென்பாக் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 600 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஐரோப்பா முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை மற்றும் வறட்சியே இந்தத் தீ விபத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. ஜெர்மனியின் மோன்ஷாவ் நகரம் எல்லையிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள நிலையில், புகை காரணமாகப் பகுதி மக்கள் தற்காலிகமாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.