NEET-UG 2026 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை வழங்க ஏதுவாக, விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதற்கான வரைவு மசோதா அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

NEET-UG 2026 தேர்வு முறைகேடு புகார்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக "மேலும் கடுமையான" நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உறுதியளித்துள்ளார். எக்ஸ் (X) தளத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோ பதிவில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை மற்றும் விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான வரைவு மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இது குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. வினாத்தாள் கசிவு என்பது சாதாரண விஷயம் அல்ல என்றும், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு இது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் ஒரு வருடம் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதே அரசின் முக்கிய பொறுப்பு என்று கூறிய பிரதமர், மிகக் குறுகிய காலத்தில் சுமார் 22 லட்சம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது எதுவும் இல்லை என்றும், அவர்களின் எதிர்காலத்தை கெடுக்க நினைப்பவர்கள் தப்ப முடியாது என்றும் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.