காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் நிலையில், கர்நாடக அரசை எதிர்க்க முதல்வர் ஜோசப் விஜய் பயப்படுவது ஏன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே என்றும் அவர் கேட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில், இது குறித்து பிரதமரிடம் பேசத் தவறியது ஏன் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜயிடம் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் தனது சமூக ஊடகப் பதிவில் சாடியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச முதல்வர் விஜய்க்கு என்ன பயம் என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதது ஏன் என்றும் வினவியுள்ளார். மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தைப் பிரதமரிடம் நேரில் சமர்ப்பிக்காதது மற்றும் தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு வழங்கப்படாதது குறித்தும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.