மோடி அரசு 1 லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகளை மூடி, பின்தங்கிய சமூகத்தினரின் கல்வி உரிமைகளைப் பறித்துள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், பள்ளிகள் மூடும் அதிகாரம் மாநிலங்களிடமே உள்ளது என்று மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, அகிலேஷ் யாதவ் மத்திய அரசு நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகளை மூடி பின்தங்கிய சமூகத்தினரின் கல்வி உரிமைகளைத் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும், உத்தரப் பிரதேசத்தில் மாநில அரசால் 26,000-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, கல்வி என்பது அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் உள்ள ஒரு விஷயம் என்பதால், பள்ளிகளைத் திறப்பது, இணைப்பது அல்லது மூடுவது தொடர்பான முடிவுகள் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று விளக்கினார். தேசிய கல்விக்கொள்கை (NEP) 2020-ன் படி, மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மட்டுமே பள்ளிகளை ஒருங்கிணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.