பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, இளைஞர்களின் அதிருப்தி ஒரு பெரிய போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார். தற்போதைய ஆட்சி முறை தோல்வியடைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் பொருளாதார உச்சிமாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, நாட்டின் நிர்வாகம் முற்றிலும் முடங்கிவிட்டதாகக் கூறினார். தற்போதைய அமைப்பு பாகிஸ்தானின் சிக்கல்களைத் தீர்க்கும் நிலையில் இல்லை என்றும், முறையான சீர்திருத்தங்கள் இல்லையெனில் அடுத்த பத்து ஆண்டுகளிலும் இதே பிரச்சனைகளைத் தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

இளைஞர்களின் அதிருப்தியைப் பற்றிப் பேசிய அவர், 'அவர்களை இளைஞர் என்று அழைக்கட்டும் அல்லது கரப்பான் பூச்சிகள் (cockroaches) என்று அழைக்கட்டும்... அவர்கள் ஒன்றுபட்டால் அனைத்தையும் தலைகீழாக மாற்ற முடியும்' என்று உருவகப்படுத்தினார். மேலும், ராணுவ முயற்சிகள் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வராது என்றும், அரசியல் தலைவர்கள் நிர்வாக அமைப்பைச் சீர்திருத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.