டொனால்ட் ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் நிறுவனம், கொள்கை தொடர்பான பதிவுகளை முன்கூட்டியே அணுகுவதற்கான கட்டண சேவையை வழங்குவதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது சமூக ஊடக நிறுவனமான ட்ரூத் சோஷியலில் கொண்டுவரப்பட்ட புதிய கட்டண சேவைக்காக கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளார். இந்தச் சேவை மூலம் அமெரிக்கக் கொள்கைகள் குறித்த அவரது பதிவுகளை சில நிறுவனங்கள் முன்னதாகவே தெரிந்துகொள்ள முடியும். போர் மற்றும் வரிகள் போன்ற முக்கிய அரசு அறிவிப்புகள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்க வேண்டும் என்றும், ஆனால் ட்ரம்ப் தனது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தின் மூலம் அதிலிருந்து லாபம் ஈட்ட முயல்வதாகவும் வழக்காளி தரப்பினர் கூறுகின்றனர்.

வால் ஸ்டிரீட் நிறுவனங்கள் ட்ரம்ப்பின் பதிவுகளை விரைவாகப் பெற மாதம் 1,00,000 அமெரிக்க டாலர் வரை கட்டணம் வசூலிக்கும் வகையில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது பத்திரிகை சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகவும், அரசியலமைப்பின் முதல் மற்றும் ஐந்தாவது திருத்தங்களைச் சிதைப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், ட்ரம்ப் மீடியா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இது அதிபரை மௌனமாக்க எடுக்கப்படும் முயற்சி என்று கூறியுள்ளது.