பீகாரில் மருத்துவமனைக்கான குப்பைத் தொட்டிகளை அதிக விலைக்கு வாங்கியதாக ஆர்ஜேடி (RJD) குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் மருத்துவமனை கழிவுகளை அகற்றும் பிரத்யேக குப்பைத் தொட்டிகளை வாங்கியதில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக ஆர்ஜேடி குற்றம் சாட்டியுள்ளது. சந்தையில் ₹1,500 மதிப்புள்ள குப்பைத் தொட்டிகள், ₹15,000 விலைக்கு வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆர்ஜேடித் தலைவர் லாலு பிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யா, இது அரசாங்கத்தின் கருவூலத்தை காலி செய்யும் புதிய தந்திரம் என்று விமர்சித்துள்ளார்.
இருப்பினும், பிஎம்எஸ்ஐசிஎல் (BMSICL) அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இவை சாதாரண பிளாஸ்டிக் தொட்டிகள் அல்ல என்றும், மருத்துவக் கழிவுகளைக் கையாளும் மேம்பட்ட மைக்ரோவேவ் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற உயர் வெப்பத்தைத் தாங்கக்கூடிய சிறப்புத் தொட்டிகள் என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர். தொழில்நுட்பத் தரம் மற்றும் இதர செலவுகளாலேயே விலை அதிகமாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.