டைனோசர் காலத்தில் வாழ்ந்த ஒரு பாம்பின் மிகச்சிறந்த நிலையில் உள்ள படிமம் கண்டறியப்பட்டுள்ளது. இது பாம்புகளின் ஆரம்பகால பரிணாம வளர்ச்சியைப் பற்றிய புதிய உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

தென்கிழக்கு பிரேசிலில் கண்டறியப்பட்ட 'டாமெடாரா மிரிம்' (Tametara mirim) என்ற புதிய வகை பாம்பின் படிமம், விஞ்ஞானிகளுக்குப் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. சுமார் 75 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, டைனோசர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் இந்த உயிரினம் வாழ்ந்து வந்தது. சுமார் 42 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த பாம்பு, அந்த காலத்து ராட்சத டைனோசர்களுடன் வாழ்ந்து வந்துள்ளது.

இந்த படிமத்தின் மண்டையோட்டின் 60% மற்றும் முதுகெலும்பின் 70% பகுதிகள் பாதுகாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சிடி ஸ்கேன் ஆய்வின் மூலம், இந்த வகை பாம்புகள் நிலத்திற்கு அடியில் வசிப்பதற்கு ஏற்றவாறு உருமாறியிருந்தன என்பது தெரியவந்துள்ளது. பாம்புகளின் பரிணாம வளர்ச்சி என்பது ஒரே பாதையில் செல்லாமல், வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப பலமுறை மாற்றமடைந்துள்ளதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.