காமன்வெல்த் போட்டிகள் 2026-ல் இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான குருவிந்தர்வீர் சிங் 100 மீட்டர் பிரிவில் 28-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றமளித்தார். இதனால் அவரது முதல் பயிற்சியாளர் ஹேப்பி சிங் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

2026 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர ஓட்டப்பந்தய வீரர் குருவிந்தர்வீர் சிங் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். 100 மீட்டர் தகுதிச் சுற்றில் 10.39 வினாடிகளில் இலக்கை எட்டிய அவர், 76 வீரர்களில் 28-வது இடத்தைப் பிடித்து முதல் சுற்றிலேயே வெளியேறினார். இவரது இந்த மோசமான செயல்பாட்டிற்கு அவரது முதல் பயிற்சியாளரான ஹேப்பி சிங் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதற்கிடையில், குருவிந்தர்வீரின் தற்போதைய பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியர், வீரரின் தசைநார் காயம் (Hamstring Injury) குறித்தான ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஒரு மாதமாக குருவிந்தர்வீர் காயத்தால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனாலேயே அவரால் தனது முழு திறனையும் வெளிப்படுத்த முடியாமல் போனதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.