இந்திய பிரீமியர் லீக் (IPL) இந்த ஆண்டு அதன் வணிக மதிப்பில் 11% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மொத்த மதிப்பு தற்போது 20.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹௌலிஹான் லோகி முதலீட்டு வங்கியின் அறிக்கையின்படி, உலகின் பணக்கார டி20 தொடரான ஐபிஎல்-ன் வணிக மதிப்பு இந்த ஆண்டு 11 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து 20.6 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சியாகும்.

2008 இல் தொடங்கப்பட்ட இந்தத் தொடர், ஒளிபரப்பு வருவாய், ஸ்பான்சர்ஷிப் மற்றும் பிராந்திய முதலீடுகளை இணைத்து ஒரு வலுவான வணிக மாதிரியை உருவாக்கியுள்ளது. ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளின் உரிமையாளர் மாற்றங்கள், பெரிய முதலீட்டாளர்கள் ஐபிஎல் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.

ஐபிஎல் பிராண்டின் தனிப்பட்ட மதிப்பு கடந்த ஆண்டில் 10.3 சதவீதம் அதிகரித்து 4.3 பில்லியன் டாலராக உள்ளது. தற்போதைய சாம்பியனான பெங்களூரு அணி 312 மில்லியன் டாலர் மதிப்புடன் லீக்கின் மிகவும் மதிப்புமிக்க அணியாகத் திகழ்கிறது.