தென்னாப்பிரிக்காவின் அனுபவமிக்க நீச்சல் வீரர் சாட் லெ க்ளோஸ் தனது 21-வது காமன்வெல்த் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் எம்மா மெக்கியோனை முந்தி அவர் முதலிடம் பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் மூத்த நீச்சல் வீரர் சாட் லெ க்ளோஸ், காமன்வெல்த் போட்டிகளின் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்ற தடகள வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். புதன்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 4x100 மீட்டர் மெட்லி ரிலே போட்டியில் வென்ற வெண்கலப் பதக்கத்துடன் அவர் தனது 21-வது காமன்வெல்த் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் அவர் ஆஸ்திரேலியாவின் எம்மா மெக்கியோனை முந்தி சாதனை படைத்துள்ளார்.
34 வயதான லெ க்ளோஸின் இந்த சாதனைத் தொகுப்பில் 7 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். 2010 இல் டெல்லியில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், கடந்த ஐந்து காமன்வெல்த் போட்டிகளிலும் தொடர்ந்து அசத்தி வருகிறார்.
லெ க்ளோஸ் ஒரு ஒலிம்பிக் சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் மைக்கேல் பெல்ப்ஸை வீழ்த்தி அவர் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தங்கம் வென்றார். அவர் இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க விரும்புகிறார்.