2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான மைதானங்கள் மற்றும் லோகோவை ஐசிசி வெளியிட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து இந்த தொடரை நடத்தும்.

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மைதானங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ லோகோவை ஐசிசி வெளியிட்டுள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக் கோப்பை மீண்டும் ஆப்பிரிக்க கண்டத்திற்குத் திரும்புகிறது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து இந்தத் தொடரை நடத்தவுள்ளன. அக்டோபர் மற்றும் நவம்பர் 2027 இல் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் 14 அணிகள் பங்கேற்று, 12 மைதானங்களில் மொத்தம் 57 போட்டிகள் நடைபெறும்.

ஜிம்பாப்வேயின் விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ள புதிய மொசி-ஓ-துக்னி சர்வதேச மைதானம் இந்த உலகக் கோப்பையின் முக்கிய ஈர்ப்பாக இருக்கும். தென்னாப்பிரிக்காவில் 8 மைதானங்கள், ஜிம்பாப்வேயில் 3 மைதானங்கள் மற்றும் நமீபியாவில் 1 மைதானம் என மொத்தம் 12 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 'மேக் தி சர்க்கிள் பிகர்' என்ற வாசகத்துடன், ஆப்பிரிக்க கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.