காமன்வெல்த் போட்டிகள் 2026-ல் இந்திய குத்துச்சண்டை வீரர் ஜதுமணி சிங் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 55 கிலோ எடைப் பிரிவில் ஆடிய அவர் ஆஸ்திரேலிய வீரரை எதிர்கொண்டார்.

இந்திய குத்துச்சண்டை நட்சத்திரம் ஜதுமணி சிங் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் போட்டிகளில் தனது வலிமையை மீண்டும் நிரூபித்துள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு ஒரு வெள்ளிப் பதக்கத்தை அவர் பெற்றுத் தந்துள்ளார்.

ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜாய் டிக்ஸனை எதிர்கொண்ட ஜதுமணி, முதல் சுற்றில் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இருப்பினும், இரண்டாவது சுற்றில் பின்னடைவைச் சந்தித்த அவர் இறுதியில் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் ஜாய் டிக்ஸன் தங்கம் வெல்ல, ஜதுமணி வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

மணிப்பூரின் இரோய்ஷெம்பா கிராமத்தைச் சேர்ந்த ஜதுமணி, பல சவால்களைத் தாண்டி இந்த நிலையை எட்டியுள்ளார். விமர்சகர்களின் பேச்சைக் கேட்காமல், தனது பயிற்சியைத் தொடர்ந்ததன் மூலம் இன்று இந்திய அணியின் முக்கிய வீரராக உயர்ந்திருக்கிறார்.