இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணையில் கடைசி நேரத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 4 நாட்களாக திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி போட்டி தற்போது 3 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதுடன், காயம் அடைந்திருந்த சாய் சுதர்சனின் உடற்தகுதி குறித்த முக்கிய அப்டேட்டும் வெளியாகியுள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 4 அன்று கொழும்பு புறப்பட உள்ளது. அங்கு ஆகஸ்ட் 7 முதல் கொழும்பு என்சிசி மைதானத்தில் நடைபெறவிருந்த 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி, தற்போது 3 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை மண்ணில் உள்ள சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை எதிர்கொள்ள, டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்த ஒரு போட்டி மட்டுமே வாய்ப்பாக அமையும்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலே மைதானத்திலும், இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்திலும் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025-27 இன் ஒரு பகுதியாகும் என்பதால் இரு அணிகளுக்கும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதற்கிடையில், கால் விரல் காயம் காரணமாக பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் (CoE) சிகிச்சை பெற்று வந்த இளம் இடதுகை பேட்ஸ்மேன் சாய் சுதர்சனின் உடற்தகுதி குறித்து நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அவர் மீண்டும் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளதால், இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்பாக அவர் முழு உடற்தகுதியை அடைந்துவிடுவார் என்று அணி நிர்வாகம் நம்புகிறது.